கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலையை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அந்தவகையில், கர்நாடக தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தலைமைக்கழக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பாளராக, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை, கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். மிகவும் கண்டிப்பானவராகவும், துடிப்பான அதிகாரியாகவும் மிடுக்கான காக்கி சீருடையில் வலம் வந்தவர். குற்றவாளிகளுக்கு தனது கோர முகத்தையும், மக்களுக்கு அன்பின் சின்னத்தையும் காட்டியதால் கன்னட மக்கள் அண்ணாமலையை 'சிங்கம்' என்ற அடைமொழியில் பாசத்தோடு அழைத்து வந்தனர். இதுதவிர கன்னடமும் சரளமாக பேசத்தெரிந்தவர். இதனால் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கணிசமான அளவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரமுடியும் என்று கட்சி மேலிடம் நம்புவதால், அவர் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.