தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்துகுறைவு

பருவமழை குறைந்ததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்து உள்ளது.;

Update: 2022-11-30 17:37 GMT

நயினார்கோவில், 

பருவமழை குறைந்ததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்து உள்ளது.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரத்தில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலையில் அமைந்து உள்ளது தேர்த்தங்கல் கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. சுமார் 29.30 எக்ேடர் பரப்பளவில் அமைந்துள்ள நீர் நிலை கடந்த 2010-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கூலைக்கடா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சு பொரித்து மீண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பி செல்லும். இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திலும் பறவைகள் வரத்து இந்த ஆண்டு தற்போது வரை மிக மிக குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல மழை

பருவமழை சீசன் தொடங்கும் முன்பு நல்ல மழை பெய்து இருந்ததால் ஏராளமான நாரைகள் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்திருந்தன. இவ்வாறு வந்திருந்த பறவைகளும் மழை இல்லாததால் பெரும்பாலான பறவைகள் திரும்பி சென்று விட்டன. இதனால் சரணாலயத்தில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, பருவமழை இன்னும் 2 மாதம் சீசன் இருப்பதால் மழை பெய்ய தொடங்கிய பின்பு அதிக பறவைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மழை இல்லாததால் பறவைகள் வரத்தும் குறைந்துள்ளது. பறவைகள் முழுமையாக வந்த பின்னரே பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பறவைகள் வருகை குறித்து கணக்கெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 10,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்