"இருமொழிக் கொள்கை தான் தமிழகத்திற்குத் தேவை" - அமைச்சர் பொன்முடி பேச்சு

தமிழுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி மட்டும்தான் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-04 16:53 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவின் போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது;-

"தமிழ்வழிக் கல்வி, நுழைவுத் தேர்வு ரத்து போன்ற பல திட்டங்களை கொண்டுவந்ததால் தான் இந்தியாவிலேயே தமிழகம் உயர் கல்வியின் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழ் வழியில் படித்து பலர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

பொறியியல் பட்டதாரிகள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய ஆங்கிலம் தேவை. அதேசமயம், தாய் மொழியான தமிழும் நமக்கு தேவை. தமிழ்நாட்டில் இந்த இருமொழிக் கொள்கை இருந்தால் போதும்.

இந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும், இல்லையென்றால் உதவித்தொகை கிடைக்காது என்கிறார்கள். இதற்காகத்தான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கென்ற ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்துள்ளார். மத்திய அரசின் கல்விக் கொள்கையில் 3,5,8-ம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு என்று கூறுகிறார்கள். இதனால் பள்ளி இடைநிற்றல்தான் அதிகரிக்கும்.

மொழி என்பது அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். தமிழுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பது இந்த திராவிட மாடல் ஆட்சி மட்டும்தான். திராவிட மாடல் ஆட்சி இல்லையென்றால் தமிழ் மொழியை ஒழித்துக்கட்டியிருப்பார்கள்."

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்