பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு கேட்டதால் இருதரப்பினர் மோதல்

சேலத்தில் பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு கேட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-06 20:33 GMT

சேலத்தில் பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு கேட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினர் மோதல்

சேலம் முகமது புறா பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று 10 பரோட்டா வாங்கினார். அப்போது அவர் கூடுதலாக குழம்பு கேட்டுள்ளார். இதற்கு கடையின் மேலாளர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது ஷாஜகான் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதையடுத்து அங்கு வந்த ஷாஜகான் தரப்பினருக்கும், கடையின் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து செய்தனர். இந்த மோதல் குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சாலை மறியல்

அதன்பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த 8-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ஷாஜகான் தரப்பை சேர்ந்தவர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள், ஷாஜகானை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்