இருதரப்பினர் மோதல்

இடத்தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 3 பேர் காயம் அடைந்தனர்

Update: 2022-12-21 20:10 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழ காலனியை சேர்ந்தவர் கணேசன் மனைவி முத்துசெல்வி (வயது 35). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். முத்துசெல்விக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் சண்முகவேல் மகன் மாரியப்பனுக்கும் (42) கடந்த 5 ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துசெல்வி தனது வீட்டில் கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்தார். இதையடுத்து டிப்பர் லாரியில் எம்.சாண்டு மணல் கொண்டு வரப்பட்டு, வீட்டின் அருகே கொட்டப்பட்டது. இதற்கு மாரியப்பனின் தந்தை சண்முகவேல் பிரச்சினைக்குரிய இடத்தில் எம்.சாண்ட் மணலை கொட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், அவரது தந்தை சண்முகவேல், மாரியப்பன் மகன் சதீஸ், மகள் சுதா ஆகியோர் சேர்ந்து, முத்துசெல்வியை தாக்கினர். இதுபோல முத்துசெல்வி, அவரது மகன்கள் ஆனந்த், சுரேஷ், முனிஸ் மற்றும் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் சேர்ந்து மாரியப்பனையும், அவரது தந்தை சண்முகவேலையும் தாக்கினர். இதில் காயமடைந்த முத்துசெல்வி நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், சண்முகவேல், மாரியப்பன் ஆகியோர் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்