இருதரப்பினர் மோதல்; 3 பேர் காயம்

களக்காடு அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-28 19:49 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள இடையன்குளம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் தர்மக்கண் மகன் ஆனந்தராஜ் (வயது 27). இவர் நேற்று மஞ்சுவிளைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் நெடுவிளை டாஸ்மாக் கடை அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற இடையன்குளத்தை சேர்ந்த யோசுவா மகன் ஷாம், கங்கணான்குளத்தை சேர்ந்த ஜோசப் மகன் கிறிஸ்டியான் (34) ஆகிய இருவரும் ேமாட்டார் சைக்கிளில் வந்த ஆனந்தராஜிடம் லிப்ட் கேட்டனர். ஆனால் அவர் லிப்ட் கொடுக்க மறுத்து விட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. ஷாமும், கிறிஸ்டியானும் சேர்ந்து, ஆனந்தராஜையும், அவரது அண்ணன் மாரிசெல்வம் என்ற குட்டியையும் (32) கம்பால் தாக்கினர். இதேபோல் மாரிசெல்வம், ஆனந்தராஜ் இருவரும் கிறிஸ்டியானை கம்பால் தாக்கினர். இதில் மாரிசெல்வம், ஆனந்தராஜ், கிறிஸ்டியான் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதில் கிறிஸ்டியான் நெல்லை அரசு மருத்துவமனையிலும், மாரிசெல்வம், ஆனந்தராஜ் ஆகியோர் களக்காடு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாரிசெல்வம் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து களக்காடு போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஷாம், கிறிஸ்டியான் மீதும், கிறிஸ்டியான் கொடுத்த புகாரின் பேரில் மாரிசெல்வம், ஆனந்தராஜ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாரிசெல்வம் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்