பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல்லில் நாளை (சனிக்கிழமை) சைக்கிள் போட்டி நடக்கிறது.
சைக்கிள் போட்டி
இது தொடர்பாக கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் நாமக்கல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவு மூலமாக மாவட்ட அளவிலான இப்போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் தூரமும் போட்டி நடைபெறும். இவர்கள் 1.1.2011 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.
இதேபோல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டரும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீட்டரும் போட்டி நடத்தப்படும். இவர்கள் 1.1.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டரும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டரும் போட்டி நடத்தப்படும். இவர்கள் 1.1.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.
பரிசு விவரம்
போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ - மாணவிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.