ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.;
குளித்தலை,
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாரியம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது. இங்கு போதுமான வகுப்பறை கட்டிட வசதி இல்லாத காரணத்தால் தனியார் திருமண மண்டபத்தில் முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆகவே இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் போதுமான ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று தினத்தந்தியில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சத்தில் இப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய கட்டிட பணிகள் விரைவில் நடக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் தற்போது இங்கு கட்டப்பட உள்ளது. இதில், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, நகராட்சி தலைவர் சகுந்தலாபல்லவிராஜா, துணைத் தலைவர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் பூபதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.