தொடர்ந்து 102 அடியாக நீடிக்கிறது; பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து 102 அடியாக பவானிசாகர் அணை நீர்மட்டம் நீடிப்பதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-22 21:52 GMT

பவானிசாகர்

தொடர்ந்து 102 அடியாக பவானிசாகர் அணை நீர்மட்டம் நீடிப்பதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 17-ந் தேதி மாலை 4 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக 102 அடியை எட்டியது.

உபரிநீர் திறப்பு

நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே நீடிக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை விதியின்படி அணையின் பாதுகாப்பை கருதி அக்டோபர் மாதம் இறுதி வரை 102 அடிக்கு மேல் தண்ணீர் நிறுத்தக்கூடாது என்ற சட்டம் உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதன் அடிப்படையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் இந்த மாதம் இறுதி வரை அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக பவானி ஆற்றில் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்