தா.பேட்டை:
தா.பேட்டையில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு தீர்த்தக்குடம் எடுத்து வருதல், சக்தி அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், திருத்தேர் உற்சவம், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பகவதி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் மேம்படவும், கல்வியில் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கவும் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின் திருத்தேரில் எழுந்து அருளிய பகவதி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மனுக்கு தேங்காய், பழம், மாவிளக்கு படைத்து வழிபட்டனர்.