பெங்களூருவில் இருந்து மதுரைக்கு மினி லாரியில் ரகசிய அறை அமைத்து புகையிலை பொருட்கள் கடத்தல்-10 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று பிடித்த போலீசார்

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு மினி லாரியில் ரகசிய அறை அமைத்து புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது. அந்த லாரியை போலீசார் 10 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

Update: 2022-12-01 21:03 GMT

கருப்பூர்:

புகையிலை பொருட்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி வழியாக மினி லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த மினி லாரியை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதாவிற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சேலம்-பெங்களூரு புறவழிச்சாலையில் திண்ணப்பட்டி பிரிவு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மினி லாரி வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் போலீசார் சோதனை செய்வதை கண்டதும், புறவழிச்சாலையில் இருந்து சர்வீஸ் ரோட்டுக்கு சென்று, அங்கிருந்த மாற்றுப்பாதையில் வேகமாக லாரியை இயக்கினார். இதைப்பார்த்த போலீசார் அந்த மினி லாரியை தங்களது வாகனத்தில் விரட்டிச்சென்றனர். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

90 மூட்டைகள்

பின்னர் போலீசார் அந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். அந்த அறையை திறந்து பார்த்த போது, அதில் சுமார் 90 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை போலீசார் பிரித்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் அருகே உள்ள தொப்பூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மாதையன் மகன் ராஜா (வயது 22) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் புகையிலை பொருட்களுடன், மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்த ராஜாவை கைது செய்தனர்.

சினிமாவை மிஞ்சுவது போன்று மினி லாரியை 10 கிலோ மீட்டர் தூரம் போலீசார் விரட்டிச்சென்று பிடித்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்