2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட பெங்களூரு-காரைக்கால் ரெயிலுக்கு சேலத்தில் வரவேற்பு
2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட பெங்களூரு-காரைக்கால் ரெயிலுக்கு சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் இருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து பெங்களூருவுக்கும் ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த ரெயில் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முதல் அந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சேலம் டவுன் ரெயில் நிலையத்துக்கு வந்த இந்த ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் தேசிய தலைவர் மு.விஜய்லட்சுமன் தலைமை தாங்கி ரெயிலுக்கு மலர் தூவி வரவேற்றார். தொடர்ந்து ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
இது குறித்து அவர் கூறும் போது, பெங்களூரு-காரைக்கால் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.செல்லகுமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் கருப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன், சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் யாசர் அராபத், தமிழ்நாடு தகவல் உரிமை சட்டத்துறை மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பூர் சக்தி, சதீஷ்குமார், சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.