வீடுகள் ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் தேர்வு முகாம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற்றது.
பேரணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.33 கோடியே 18 லட்சத்தில் 304 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று வேலூர் கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் கீதா தலைமையில் நடந்தது. இதில் 54 நபர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிற்கும் மாநில அரசு மானியம் ரூ.7 லட்சம், மத்திய அரசு மானியம் ரூ.1½ லட்சம் ஒதுக்கீடு போக பயனாளிகள் ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் செலுத்த வேண்டும். பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.முகாமில் உதவி நிர்வாக பொறியாளர் மோகன், இளநிலை பொறியாளர் அரிகோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.