கீழடியில், இயற்கை விவசாயிகளின் விதை திருவிழா
கீழடியில், இயற்கை விவசாயிகளின் விதை திருவிழா நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் நேற்று வையை இயற்கை விவசாயிகளின் 2-ம் ஆண்டு விதை திருவிழா கலெக்்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில் 2-ம் ஆண்டு விதை திருவிழாவின் ஆண்டு மலரை கலெக்டர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும் போது,
கீழடி கிராமத்தில் வையை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பணியினை தொடங்கி, தற்போது இரண்டாம் ஆண்டின் விதை திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை அனைவரும் தற்சமயம் உணர்ந்து வருகிறோம். செயற்கையாக தயாரிக்கப்படும் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அறிந்து வருகிறோம். இயற்கை விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்க்கும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விதைகளின் உற்பத்தியை பெருக்கிடவும் 7 டன் விதைகளை வழங்க அரசு நிர்ணயித்துள்ளது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் இச்சான்றிதழ்களை பெற வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 15 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளையும், 10 விவசாயிகளுக்கு உயிர் உரங்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். விழாவில் குன்றக்குடி அடிகளார், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு கருணாகர சேதுபதி, உலகத் தமிழ் மாநாட்டில் உரை நிகழ்த்திய முதல் தமிழ் விவசாயி பாமயன், சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் சேதுகுமணன், இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணா உள்பட பலர் பேசினார்கள். வேளாண்மை துறை இணை இயக்குனர் தனபாலன், துணை இயக்குனர் பன்னீர்செல்வம், யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், மற்றும் இயற்கை விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மானாமதுரை டாக்டர் ராமலிங்கம் நன்றி கூறினார்.