பெல் மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெல் மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகள்-லேப் டெக்னீசியன்கள் உள்பட சுமார் 160 பேருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 6 மாதம் சம்பளம் வழங்கவில்லையாம். இதனை கண்டித்து உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி கருப்பு பட்டை அணிந்து வேலை பார்த்த சுமார் 16 பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது. இந்தநிலையில் வேலையில் இருந்து நீக்கிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தமானது முடிவற்று, தற்போது புதிய தனியார் ஒப்பந்த நிறுவனம் கையெழுத்தாகி உள்ளது. இந்தநிலையில் நீக்கப்பட்ட பணியாளர்களை அந்த நிறுவனமும் மீண்டும் பணியில் சேர்க்கவில்லையாம். இதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நேற்று பெல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.