முன்விரோதத்தில் அடித்துக்கொன்று புதைக்கப்பட்ட விக்கிரவாண்டி வாலிபரின் உடல் 2½ மாதத்துக்கு பிறகு ஏரியில் தோண்டி எடுப்பு 4 பேர் கைது; பரபரப்பு தகவல்

முன்விரோதத்தில் அடித்துக்கொன்று புதைக்கப்பட்ட விக்கிரவாண்டி வாலிபரின் உடல் 2½ மாதத்துக்கு பிறகு ஏரியில் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-19 18:45 GMT

விக்கிரவாண்டி, 

அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கவியரசன்(வயது 26). இவர் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய கலியமூர்த்தி மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கவியரசனை அவருடைய நண்பரான ஆவுடையார்பட்டை சேர்ந்த நாகராஜ் மகன் ராம்குமார்(20) என்பவர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அடித்துக் கொலை செய்து நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து ஆவுடையார்பட்டு ஏரியில் புதைத்தது தெரிய வந்தது.

உடல் தோண்டி எடுப்பு

இதையடுத்து கடந்த 17-ந்தேதி முதல் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கவியரசனின் உடலை ஆவுடையார்பட்டு ஏரியில் 11 அடி ஆழ தண்ணீரில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இறுதியாக நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டறிந்தனர்.

பிரேத பரிசோதனை

அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 12 மணியளவில் விக்கிரவாண்டி தனி தாசில்தார் ஜோதிவேல் முன்னிலையில் தடயவியல் துணை இயக்குனர் சண்முகம் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் ஏரியில் சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு படகில் சென்று கவியரசனின் உடலை தோண்டி எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

அதன்பிறகு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவ குழுவினர் உடலை அங்கேயே வைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர் கவியரசனின் உடல் கலியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

4 பேர் கைது

மேலும் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ராம்குமார் உள்ளிட்ட 8 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதையறிந்த ராம்குமார், இவரது நண்பர்கள் வில்லாளன் மகன் அன்புமணி(27), எழிலரசன் மகன் சஞ்சய்(19) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் வெளியூர் தப்பி செல்வதற்காக விக்கிரவாண்டி மேலக்கொந்தை சாலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

அப்போது ராம்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி நானும், நண்பர் கவியரசனும் டாஸ்மாக் கடையில் மது குடித்தோம். அப்போது எனக்கும் கவியரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நான் கவியரசனை கொல்ல திட்ட மிட்டு, அவரை ஆவுடையார்பட்டிற்கு வர வைத்தேன். பின்னர் இருவரும் மது அருந்தினோம். அப்போது நான் மதுபோதையில் கவியரசனை அடித்து கொலை செய்து, நண்பர்கள் உதவியுடன் ஏரியில் புதைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்