போலீஸ் பணியில் நேர்மையாக செயல்பட வேண்டும்
போலீஸ் பணியில் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் பயிற்சி நிறைவு விழாவில் தீயணைப்பு துறை டி.ஜி.பி.பிராஜ் கிஷோர் ரவி பேசினார்.
பயிற்சி நிறைவு விழா
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் பயிற்சி பள்ளி செயல்படுகிறது. இங்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 197 பேருக்கு, கடந்த 7 மாதங்களாக போலீஸ் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கவாத்து, சட்டம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பிராஜ் கிஷோர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியில் முதல் 3 இடங்களை பிடித்த போலீசாருக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதேபோல் பயிற்சி அளித்த போலீசாருக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
நேர்மையாக செயல்படுங்கள்
அப்போது டி.ஜி.பி. பிராஜ் கிஷோர் ரவி பேசுகையில், போலீஸ் பள்ளியில் முடித்த பயிற்சியை 197 பேரும் பணியின் போது நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். போலீஸ் பணியில் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட வேண்டும். அதன்மூலம் போலீஸ் துறை மற்றும் பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆனந்தராஜ், முருகன், இன்ஸ்பெக்டர்கள் அமுதா, டேவிட் மற்றும் போலீஸ் அதிகாரிகள், பயிற்சி முடித்த போலீசாரின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே பயிற்சி முடித்த 197 பேரும் போலீஸ் நிலையங்களில் ஒரு மாதம் களபயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர். அதன்பின்னர் பணியிடம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
--------