சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்?
ஓசூர் அருகே எருது விடும் விழா தொடர்பான விவகாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
ஓசூர் அருகே எருது விடும் விழா தொடர்பான விவகாரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தாக்கியதாக வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோபச்சந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், நான் ஒருவரை லத்தியாலும், காலாலும் தாக்கியதாக ஒரு வீடியோ பரவி வருகிறது. எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், அங்கிருந்த பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் சிலர் அத்துமீறி நடக்க முயன்றனர். மேலும் அவர்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வார்த்தைகளாலும் பேசினர்.
இதனால் அவர்களை பிடித்து அமர வைத்தோம். அப்போது நடந்த நிகழ்வை தான், போலீஸ் சூப்பிரண்டு லத்தியால் அடிக்கிறார். பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் சிலர் தவறாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த போலீசார், உள்ளூர் மக்கள் அறிவார்கள்.
குளறுபடி இல்லை
ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாக குளறுபடியோ இல்லை. விழா நடத்துபவர்கள், உரிய சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர். உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்சினையில் ஈடுபடவில்லை. பொதுவாக எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகளை கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
ஆனால் விதிகளுக்கு மாறாக அண்டை மாநில வாலிபர்கள், தங்கள் மாடுகளுடன் வந்தனர். அவர்கள் எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி சாலையில் மறியல் செய்தும், தாக்கியும் உள்ளனர். இந்த நிகழ்வில் கூட உள்ளூரை சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அத்துமீறி நடக்க முயன்றது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.
கைது செய்யப்படுவார்கள்
வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்று புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். ஒருவரும் தப்ப முடியாது. அனைவரும் கைது செய்யப்படுவார்கள். சாலை மறியலின் போது முதலில் லாரியை கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தியது யார்? என்றும், சாலையில் கற்களை போட்டது யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்.
கைதாக கூடிய அனைவரின் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த சம்பவத்தில் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். அரசு உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் பொதுமக்கள் யாரும் காயம் அடையவில்லை.
கடும் நடவடிக்கை
இந்த நேரத்தில் உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்பதை ஏற்க முடியாது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி மறியல் செய்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 200 போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது பாராட்டக் கூடியது. இனி வரும் காலங்களில் எருது விடும் விழா நடத்துபவர்கள் விழாவிற்கு முந்தைய நாளே தகுதியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
முறையாக பெறும் சான்றிதழ் விவரங்களை போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முடியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் விழாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து இனி மாடுகளுடன் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வெளிமாவட்ட மக்கள் தங்களின் மாடுகளுடன் இங்கு வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.