சென்னை-இந்தோனேசியா இடையே தினசரி விமான போக்குவரத்து தொடங்கியது

சென்னை-இந்தோனேசியா இடையே தினசரி விமான போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-08-13 10:46 GMT

நேரடி விமான போக்குவரத்து

இந்தோனேசியா நாட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. தமிழகத்தில் இருந்து இந்தோனேசியா செல்ல வேண்டிய பயணிகள் டெல்லிக்கு சென்று அங்கிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்தும் இணைப்பு விமானங்கள் மூலமாக செல்ல வேண்டும். இந்த நிலையில் இந்தோனேசியாவில் உள்ள மேடான் நகரில் குவாளா நாமு விமான நிலையத்துக்கும், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கும் இடையே தினசரி நேரடி விமான போக்குவரத்து சேவை தொடங்கியது.

சுற்றுலா பயணிகளுக்கு வசதி

இந்தோனேசியா மக்கள் தமிழ்நாட்டுக்கு பெருமளவு வருகின்றனர். தமிழ்நாடு கலாசாரம், பாரம்பரியம் நிறைந்த சுற்றுலா தளங்கள், கோடை வாசஸ்தலங்கள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள் நிறைந்தது என்பதால் சுற்றுலாவிற்காக வருகின்றனர். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதற்கு ஏற்ப தினசரி நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளும் சுற்றுலாவுக்காக இந்தோனேசியா செல்ல உதவியாக இருக்கும். நேரடி விமான சேவை மூலம் பயண நேரமும், கட்டணமும் குறையும் என கூறப்படுகிறது.

பயணிகளுக்கு வரவேற்பு

அதன்படி இந்தோனேசியா மேடான் நகரில் இருந்து முதல் விமானம் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த 51 பயணிகளை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சென்னையில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு 43 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் மேடான் நகருக்கு புறப்பட்டு சென்றது.

இந்தோனேசியா நாட்டுக்கு சென்னையில் இருந்து தினசரி நேரடி விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேடான் நகர் அருகே உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான சுமத்திரா தீவு உள்ளது. சுமத்திரா தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்