குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
உபரி நீர் வெளியேற்றம்
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை நீடித்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1,024 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் இந்த அணையிலிருந்து வினாடிக்கு 1,024 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கோதையாற்றில் கலந்து பாய்வதால் கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணியாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
கோதையாற்றில் தண்ணீர் அதிகரித்ததால், அது திற்பரப்பு அருவி வழியாக பாய்வதால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் இங்கு படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மழை இல்லை
மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் நேற்று மாலை வரை மழை பெய்யவில்லை, மழை மேகங்கள் திரண்டிருந்த நிலையில் அவ்வப்போது லேசான சாரல் மட்டுமே ஆங்காங்கே பெய்தது.