பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது.

Update: 2022-07-08 16:29 GMT

பொள்ளாச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியது.

பரம்பிக்குளம் அணை

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணை கேரள வனப்பகுதிக்குள் இருந்தாலும் பராமரிப்பு, நீர்வரத்தை கணக்கீடுதல், தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மின் உற்பத்தி

இந்த நிலையில் கடந்த ஆண்டு அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 50 அடியை எட்டியது. தற்போது அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1 இயக்கப்பட்டு 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, பரம்பிக்குளத்திற்கு வினாடிக்கு 800 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

தொடர் கண்காணிப்பு

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.80 அடியாக இருந்தது. மேலும் அணைக்கு வினாடிக்கு 2853 கன அடி தண்ணீர் நீர்வரத்து இருந்தது. இதற்கிடையில் அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று ஆழியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. தற்போது 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 92.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 882 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்