கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வைக்கப்பட்ட பேனர்கள்
டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாக வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாக வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மது பாட்டில்களின் அதிகபட்ச விலை மற்றும் வரிகள் உட்பட எத்தனை ரூபாய் என்று மதுபாட்டில்களிலேயே அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து டாஸ்மாக் கடைகளில் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை சுட்டிக்காட்டும் விதமாக 3 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக ரூ.10...
அந்த பேனர்களில் தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச விலை மற்றும் வரிகள் உட்பட என விலை அச்சிட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அனைத்து டாஸ்மாக்ளிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
அந்த ரூ.10 யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலை விற்கக்கூடாது, அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மாக் இழுத்து மூடப்படும். அந்த கூடுதல் ரூ.10 பெறும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த பேனரில் உள்ளது.
இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் நேற்றுமுன்தினம் இரவு வைக்கப்பட்ட இந்த பேனர்கள் நேற்று மதியம் அகற்றப்பட்டது. பேனர்களை வைத்தவர்களே அவற்றை கழட்டி எடுத்துச்சென்று விட்டதாக டாஸ்மாக் கடை மேலாளர் தெரிவித்தார். ஆனாலும் அங்கு மதுபானம் வாங்கி வந்தவர்களிடம் கேட்டபோது ரூ.130 குவாட்டர் மது பாட்டிலுக்கு ரூ.140 கொடுத்து டாஸ்மாக் கடையில் வாங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.