பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.;
சத்தியமங்கலம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
குண்டம் திருவிழா
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பண்ணாரி அருகில் உள்ள கிராமப் பகுதியில் இருந்த வந்த பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மஞ்சள் நீராட்டு
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புஷ்பரத பல்லக்கு கோவில் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தது. நேற்று பகல் 11 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது பண்ணாரி மாரியம்மன் உற்சவரை சப்பரத்தில் வைக்கப்பட்டு கோவிலை சுற்றி வந்தது.
மேலும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை ஊற்றியும், வண்ணங்களை பூசியும் மகிழ்ந்தனர். சப்பரத்தை தூக்கி வரும் பக்தர்கள் மீது பலரும் மஞ்சள் நீரை ஊற்றி விழாவை கொண்டாடினார்கள்.