அடுக்குமாடி குடியிருப்பின 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலி - போலீசார் விசாரணை

கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து விழுந்து வங்கி அதிகாரி மனைவி பலியானார். அவரது சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update:2023-02-08 09:09 IST

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் பங்கஜ்குமார் (வயது 49). இவரது மனைவி மஞ்சரி தேவ் (46). பங்கஜ்குமார் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் குடும்பத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கோயம்பேடு, ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 10-வது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்ற நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பங்கஜ்குமார் எழுந்து பார்த்தபோது வீட்டில் மனைவி இல்லாததால் குழப்பம் அடைந்தார். பின்னர் மஞ்சரி தேவ்வினை தேடிப்பார்த்த போது, அடுக்குமாடி குடியிருப்பின் கீழே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மஞ்சரி தேவ் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே மஞ்சரி தேவ் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கி அதிகாரியின் மனைவி மாடியில் இருந்து விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்