மெரினா கடற்கரையில் துணிகரம் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்.

Update: 2022-10-05 22:48 GMT

சென்னை,

சென்னை கோயம்பேடு பாடிகுப்பம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அகில் வர்கிஸ் பால் (வயது 29). தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு காற்று வாங்கியபடி மணற்பரப்பில் நடந்துசென்றார். அப்போது அங்கு வந்த 3 நபர்கள் அவரை மிரட்டி பணம் கேட்டனர்.

ஆனால் அவர் பணம் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அகில் வர்கிஸ் பாலின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த அகில் வர்கிஸ் பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

14 வயது சிறுவன்

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வழிப்பறியில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி பழனியப்பன் கோவில் 4-வது தெருவை சேர்ந்த சபரி (22) என்ற வாலிபரும், 14 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் சபரியும், 14 வயது சிறுவனும் சிக்கினர். இதில் சிறுவன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருட்டு செல்போனுடன் 17 வயது சிறுவன் தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்