கஞ்சா வியாபாரிகள் 32 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 32 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறினார்.;
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 32 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறினார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள்
தமிழகத்தில் இந்திமொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வடமாநிலங்களில் வதந்தி பரவியதையடுத்து, இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதால் ஊருக்கு புறப்படுவதாகவும் வதந்தியை பரப்புகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 784 ஆண் தொழிலாளர்களும், 406 பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொண்டு தெரிவிக்க எண் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர போலீசாரும் வடமாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
32 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 181 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 192 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவர்களில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த கஞ்சா வியாபாரிகள் 32 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை 18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 54 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
இதில் ராம்ஜிநகர் பகுதியில் மட்டும் கஞ்சா விற்றதாக 78 வழக்குகளும், 7 பெண்கள் உள்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்ற வழக்கில் 2022-ம் ஆண்டு 9 பேரும், இந்தாண்டு 2 பேரும் என 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான மதன், கமல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை தொடர்பான தகவல்களை 96884-42550 மற்றும் 94981-81325 ஆகிய அலைபேசி எண்களுக்கு தெரியப்படுத்தலாம். சிறை தண்டனையில் இருந்து விடுபட்டு திருந்தியவர்களுக்கு அரசிடம் இருந்து தேவையான உதவிகள் பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.