போதைப்பொருள் சம்பந்தமாக 22 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் சம்பந்தமாக 22 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-08-24 18:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் சம்பந்தமாக 22 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

மனுநீதிநாள் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள கணியூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. ராணிப்பேட்டை கோட்டாட்சியர் பூங்கொடி, கலவை தாசில்தார் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் தன்ராஜ் வரவேற்றார். ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்துகொண்டு பேசினார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 தீராத குறைகளை கேட்டுள்ளார். ஆற்காடு தொகுதியில் கலைக்கல்லூரி, ஒகேனக்கல் கூட்டுகிடிநீர் திட்டத்தையும் உடனடியாக நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்றார்.

கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தலைமைதாங்கி ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

வங்கி கணக்குகள் முடக்கம்

தமிழக முதல்-அமைச்சர் போதைப் பொருள்களை ஒழிக்க கலெக்டர்கள் மாநாட்டில் எடுத்துரைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட 22 நபர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு ஸ்பிரிட் என்கிற சாக்லேட்டை வாங்கி கொடுக்க வேண்டாம். அதில் ஒரு விதமான போதை பொருள் உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்று நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 15,000 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். பனை விதைகளை அதிகளவு சேமித்து ஏரியின் கரையோரம் நடவு செய்ய வேண்டும். நாம் அனைவரும் போதைப் பொருட்களை ஒழிப்போம், மரங்களை நடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேகா, கோகுல், மண்டல துணை தாசில்தார் இளையராஜா, வருவாய் ஆய்வாளர்கள் வீரராகவன், வினோத்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீதர், வினோத், மாதவன், ஷோபன் ராஜ், விஜய் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இந்துமதி நன்றி கூறினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்