பென்னாகரம் மத்திய கூட்டுறவு வங்கியில்போலி நகையை அடமானம் வைத்து ரூ.6 லட்சம் மோசடி சேலம் ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை
பென்னாகரம்:
பென்னாகரம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சேலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை அடமானம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிறுத்தம் அருகே மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள், விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெறுகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி எட்டியாம்பட்டியை சேர்ந்த முத்து மகன் சிவா என்பவரின் பெயரில் ஆவணங்களை கொடுத்து புதிய வங்கி கணக்கு தொடங்கி சுமார் 160 கிராம் நகையை அடமானம் வைக்கப்பட்டது. பின்னர் ஆவணங்கள் மற்றும் நகை சரிபார்க்கப்பட்ட பின்னர் தனது மனைவியிடம் ஒருமுறை கேட்டுவிட்டு வருவதாக கூறிவிட்டு அந்த நபர் நகையை பெற்று சென்று விட்டார். பின்னர் மீண்டும் வந்து நகையை கொடுத்துரூ.6 லட்சம் கடனாக பெற்றுசென்றார்.
தனிப்படை அமைப்பு
இதையடுத்து மாலையில் வங்கியில் அடமானம் வைத்த நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக வங்கி மேலாளர் அனைத்து நகைகளையும் சோதனை செய்தபோது முத்து என்பவர் கொண்டு வந்த நகை போலியானது என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கொடுத்த ஆவணங்களை சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலி என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலி நகையை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடிக்ககோரி நகை மதிப்பீட்டாளர் சசிகலா பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆட்ேடா டிரைவர்
இந்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து போலி நகைகளை வைத்து ரூ.6 லட்சம் கடன் பெற்றவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (வயது 43) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சேகரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி ஆவணங்கள் தயாரித்து போலி நகையை வங்கியில் கொடுத்து ரூ.6 லட்சம் கடன் பெற்ற சம்பவம் பென்னாகரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.