கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகையையொட்டி, கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

Update: 2022-09-07 16:05 GMT

கன்னியாகுமரிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகையையொட்டி, கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வருகை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோதோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று தொடங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் வருகையையொட்டி, குமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நவீன படகில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

100 அடிக்கு ஒரு போலீஸ்

ராகுல்காந்தி இன்று இரவு முதல் 10-ந்தேதி இரவு வரை குமரி மாவட்டத்தில் தங்குகிறார். அவர் தங்க உள்ள இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் பகுதியில் 100 அடிக்கு ஒரு போலீஸ் வீதம் நிறுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று இரவு போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடந்தது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று மதியத்துக்கு மேல் அடைக்கப்பட்டன. அது போல் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படவில்லை. கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்