பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகளில் பொருட்கள் ஏற்றி இறக்க தடை

நகராட்சி, பேரூராட்சிகளில்பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகளில் பொருட்கள் ஏற்றி இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-21 18:54 GMT

ராணிப்பேட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சோதனை முறையாக வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பள்ளி, கல்லூரி, அலுவலக வேலை நேரங்களான காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வணிகத்தலங்களில் லாரிகள் மூலம் பொருட்கள் ஏற்றுதல், இறக்குதல் பணி மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் வணிகத்தலங்களில் பொருட்கள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணியை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான ஞாயிறு அன்று எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களையும் மேற்படி தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள காவல் துறையினர், உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்