பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது42).இவருக்கு நித்தியலட்சுமி (38) என்ற மனைவியும், தர்ஷினி (13) என்ற மகளும் உள்ளனர். தர்ஷினி பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் தனது தாய் நித்தியலட்சுமி மற்றும் உறவுக்கார பெண் பிரியாவுடன் துணி எடுக்க பல்லடத்தில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.40 ஆயிரத்தை கண்ட சிறுமி தர்ஷினி அதனை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளார். பின்னர் தாயும், மகளும் துணிக்கடையின் எதிரே உள்ள பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கண்டெடுத்த ரூ.40 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து பள்ளி சிறுமியின் நேர்மையான செயலை போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் "பல்லடம் சாலையில் ரூ.40 ஆயிரத்தை தவறவிட்டவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுச்செல்லலாம்" என்றனர்.