காரைக்குடியில் பால்குடம் ஊர்வலம்
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு காரைக்குடியில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது;
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு நேற்று ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்தனர். முன்னதாக புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன்ஜி மற்றும் மாநில செயலாளர் சுமதிசெந்தில்நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தேங்காய்களை உடைத்தும் வழிபட்டனர். விழாவையொட்டி காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.