கழுகுமலைகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் பால்குடம் ஊர்வலம்
கழுகுமலைகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.;
கழுகுமலை:
கழுகுமலை காளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் விழா
கழுகுமலை யோகீஸ்வரர் சமுதாயத்தின் சார்பில் காளியம்மன் கோவில் 46-ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இ்வ்விழாவை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், மதியம் 12 மணியளவில் அம்மனுக்கு சந்தனகாப்பு சாத்துதல் நடந்தது. இரவு 7 மணிக்கு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மன் துதிபாடி வழிபாடு நடத்தினர்.
கடந்த 28-ந் தேதி மாலை 6 மணிக்கு வடக்குத்தி அம்மனை வழியனுப்புதல் நடந்தது. அன்று இரவு 7 மணிக்கு அக்கினிசட்டி நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விரதமிருந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ெசன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பால்குடம் ஊர்வலம்
நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்களில் இருந்த புனிநீரை அம்மனுக்கு ஊற்றி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு 9 மணிக்கு 21 அக்கினி சட்டி எடுத்து மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.