பால்குடம் ஊர்வலம்
சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்டசேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவிலில்சிங்கம்புணரி கிராமத்தார்கள் மற்றும் ஓம் சேவுகா அய்யப்ப யாத்திரை குழுவினர் சார்பில் தமிழ் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சந்திவீரன் கூடத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் பால்குட விழா தொடங்கி வைக்கப்பட்டது.
பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற பரிவார தெய்வங்களான பிடாரியம்மன், முருகப்பெருமான், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் அன்னதான மண்டபத்தில் 5,000 பக்தர்களுக்கு சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.