ஊதியூர் அருகே வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட்டமலைக்கரை ஓடை பாலம்
கோவை மாவட்டம், செஞ்சேரிமலை சுற்றியுள்ள பகுதிகளை நீர்பிடிப்பு இடங்களாக கொண்டு திருப்பூர் மாவட்டம் புத்தரச்சல், எடையபட்டி, நிழலி, வட்டமலை வழியாக வட்டமலைக்கரை ஓடை வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு செல்கிறது. சுமார் 200 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஓடையின் குறுக்கே பல இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஊதியூர் அடுத்துள்ள வஞ்சிபாளையத்திலிருந்து காடையூர் செல்லும் சாலையில் நிழலி அருகே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகம் நிறைந்த இந்த சாலையில் நிழலி அருகே அமைக்கப்பட்டுள்ள பாலம் பழுதடைந்த நிலையில், பக்கவாட்டு கைப்பிடி சுவர்கள் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
புதிய பாலம் கட்ட கோரிக்கை
இதனால் கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்லும் போது அசம்பாவிதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.