பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானம், மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-06-29 13:23 GMT

சிறப்பு தொழுகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈக்தா மைதானம், மசூதிகளில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து ஈக்தா மைதானம், மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்கள். அதேபோன்று வேலூர் சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், அல்லாபுரம், மக்கான், டிட்டர்லைன், சத்துவாச்சாரி, சேண்பாக்கம், காட்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைகளை குலுக்கியும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்கள், ஏழை, எளிய மக்கள், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பிரியாணி வழங்கி அன்பை வெளிப்படுத்தினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மசூதிகள், ஈத்கா மைதானங்களையும் போலீசார் கண்காணித்தனர்.

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதைத்தவிர கோட்டை நுழைவுவாயில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் கோட்டைக்கு வந்த பொதுமக்களை சோதனை செய்து உள்ளே அனுப்பினர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு செல்லும்படி போலீசார் கூறினர். சந்தேகப்படும்படியான நபர்களை கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கோட்டைக்கு வந்த சில காதல்ஜோடிகள் போலீசாரை கண்டதும் திரும்பி சென்றனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு நகரில் பெரிய ஈத்கா, சிறிய ஈத்கா, நவாப் தரியகான் ஈத்கா, ஏரிகுத்திமேடு, அப்ரார் ஈத்கா, தவ்ஹீத் திடல் உள்ளிட்ட 6 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

பேரணாம்பட்டு அருகே உள்ள வளத்தூர், இதயாத்பூர், குளிதிகை, எம்.வி.குப்பம், புதூர், வசந்தபுரம், அழிஞ்சிகுப்பம் உள்ளிட்ட 6 கிராங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

பேரணாம்பட்டில் காலை 6 மணி முதல் சுமார் 9 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் தொழுகையின் போது சிரமங்கள் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்