பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2022-07-10 19:29 GMT

மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். அதன்படி திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நேற்று காலை பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பள்ளிவாசல் இமாம் தலைமையில் தொழுகை நடத்தப்பட்டது. இதில் பேகம்பூர் உள்பட திண்டுக்கல்லின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பள்ளிவாசல்களில் தொழுகை

இதேபோல் நாகல்நகர் பள்ளிவாசல், முகமதியாபுரம் பள்ளிவாசல், ரவுண்டுரோடு பள்ளிவாசல் உள்பட திண்டுக்கல் நகரின் பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை நடத்தப்பட்டது. அதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பழனி

பழனி சண்முகநதி பகுதியில் உள்ள பள்ளிவாசல் திடலில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கூடி தொழுகை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலக உயிர்கள் அனைத்தும் நோய் ஏதுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனூர் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

வத்தலக்குண்டு-நத்தம்

வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசலில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு கடை வீதி, பிளீஸ்புரம், பெரியகுளம் சாலை வழியாக ஈத்கா மைதானத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

நத்தம் அருகே கோவில்பட்டியில் கோரிமேடு ஈத்கா மைதானத்துக்கு முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

வேடசந்தூர், சாணார்பட்டி

வேடசந்தூர் கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம், குடகனாறு பாலம், ஆத்துமேடு வழியாக ஈத்கா மைதானத்துக்கு வந்தனர். அங்கு தொழுகை நடைபெற்றது. இதில் ஜமாத் தலைவர் முகமதுகாசீம், செயலாளர் உமர்அலி, பொருளாளர் தையூப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் சாணார்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்பட்டி, மருநூத்து, பாறைபட்டி, ராஜக்காபட்டி, மந்தநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். மேலும் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்