பழனியில் மின்சாரம் பாய்ந்து பேக்கரி ஊழியர் பலி

பழனியில் மின்சாரம் பாய்ந்து பேக்கரி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-18 21:00 GMT

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் ஜெய்கணேஷ் (வயது 20). இவர், பழனி கோர்ட்டு அருகே உள்ள பேக்கரி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற ஜெய்கணேஷ், பேக்கரி கட்டிடத்தின் பின் பகுதியில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், மின் மோட்டார் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மோட்டார் அறை பகுதியில் ஜெய்கணேஷ் இறந்து கிடந்தார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜெய்கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மின் மோட்டாரை இயக்குவதற்காக ஜெய்கணேஷ் 'சுவிட்ச்'சை போட்டபோது, அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்