ஜாமீனில் வந்த தொழிலாளி மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை
ஜாமீனில் வந்த தொழிலாளி மகளுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பால்ராஜ் (வயது 34). இவர், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ரிஷி (7) என்ற மகனும், நிதர்சனா (4) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா விராலிமலை அருகே உள்ள வில்லாருடையில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பால்ராஜ், அவரது 2 குழந்தைகளுடன் கட்டக்குடியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
மனைவிக்கு கத்திக்குத்து
இந்தநிலையில் கடந்த மாதம் செல்போனில் பிரியாவை, பால்ராஜ் தொடர்பு கொண்டார். அப்போது குழந்தைகள் உன்னை பார்க்க விரும்புவதாகவும், அதனால் விராலிமலை முருகன் கோவிலுக்கு வருமாறும் அழைத்துள்ளார்.
இதை நம்பிய பிரியா விராலிமலை கோவிலுக்கு சென்றார். மலை அடிவாரத்தில் இருவரும் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது பால்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பிரியாவை குத்தினார். இதில் பிரியா காயமடைந்தார்.
ஜாமீனில் வந்தார்
இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் பால்ராஜ் வெளியே வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை பால்ராஜ் தனது மகள் நிதர்சனாவை அழைத்து கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவர்களை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
தந்தை-மகள் உடல் மீட்பு
இந்தநிலையில் நேற்று காலை கட்டக்குடி தர்மகுளம் பகுதியில் உள்ள குளத்தில் பால்ராஜும், நிதர்சனாவும் பிணமாக மிதந்தனர். இதுபற்றி தகவலறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி 2 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பால்ராஜ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகள் நிதர்சனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.