வளர்ப்பு யானை தாக்கி பாகன் படுகாயம்

ஆனைமலை அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பியபோது மதம் பிடித்த வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-11-18 18:45 GMT

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே மேய்ச்சலுக்கு சென்று திரும்பியபோது மதம் பிடித்த வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் படுகாயம் அடைந்தார்.

வளர்ப்பு யானைகள் முகாம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி முகாம் உள்ளது. இங்கு 22 வளர்ப்பு யானைகளை பாகன்களை வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க சுயம்பு என்ற யானையை பாகன் பிரசாந்த்(43) பராமரித்து வருகிறார். அவர் நேற்று காலையில் யானையை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் முகாமுக்கு அழைத்து வந்தார்.

தீவிர சிகிச்சை

அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. தொடர்ந்து பாகன் பிரசாந்தை தாக்கி, அருகில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசியது. இதில் அவருக்கு கால், மார்பு, தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மலைவாழ் மக்கள் உதவியோடு படுகாயமடைந்த பாகன் பிரசாந்தை மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறையினர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்