பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் விதை வங்கிகள் உருவாக்க வேண்டும்

பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் விதை வங்கி உருவாக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-16 17:57 GMT

பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் விதை வங்கி உருவாக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதை நெல்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

'விவசாயியின் வீட்டுக்குள் நுழையும் போது மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல்லின் வித்தியாசமான வாசனை மூக்கைத் துளைக்கும். உணவுத் தேவைக்கான நெல் மட்டுமல்லாமல் விதைத்தேவைக்கான நெல்லை இருப்பு வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். முதல் போக வெள்ளாமையில் விளைந்த நெல்லைப் பாதுகாத்து விதை நெல்லாகப் பயன்படுத்துவார்கள்.

வேறு இனக்கலப்பு, மண், கல் இல்லாமல் சுத்தம் செய்து, நன்கு காயவைத்து, பூச்சி வீணாக்கி விடாமல் தடுக்க வேப்பந்தழைகளைப் போட்டு பானை, குதிர் அல்லது பத்தாயம் என ஏதாவது ஒன்றில் சேமித்துவைப்பார்கள். ஒவ்வொரு மாதத்துக்கு ஒருமுறை விதை நெல்லை எடுத்து காய வைத்து மீண்டும் இருப்பு வைப்பார்கள்.

முளைப்புத்திறன்

கம்பு, சோளம், கேழ்வரகு என்று அனைத்து விதமான தானியங்களின் விதைகளையும் பாதுகாத்து வைத்து விதைப்பு செய்யும் பழக்கம் இருந்தது. விதைப்பதற்கு முன்பாக விதையை ஊற வைத்து துணியில் கட்டிவைத்து முளைப்புத்திறன் பரிசோதிக்கும் பழக்கமும் அன்றே நமது முன்ேனார்களிடம் இருந்தது. எதிர்பாராத விதமாக ஒரு விவசாயியின் விதை பாதிக்கப்பட்டால் அவர்களிடமிருந்து உணவு தானியத்தைப் பெற்றுக்கொண்டு பதிலாக விதைகளைக் கொடுக்கும் பழக்கமும் இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் விதைகளை உற்பத்தி செய்வதற்கும் இருப்பு வைப்பதற்கும் விவசாயிகள் தயாராக இல்லை. இதனால் அரசோ, தனியாரோ கொடுக்கும் விதைகளை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு உரம், பூச்சி மருந்து என பல மடங்கு செலவிட வேண்டியதுள்ளது. பசுமைப் புரட்சிக்குப் பின்னர் அதிக உற்பத்தி என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படத் தொடங்கியதால் பாரம்பரிய விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. விதைகளை சேமிக்கும் பழக்கமும் படிப்படியாக குறைந்துவிட்டது.

பாரம்பரிய விவசாயம்

சமீபகாலங்களாக போலி மற்றும் தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிகழ்வு அடிக்கடி நடைபெறுகிறது. மீண்டும் முளைக்கும் தன்மையில்லாத மலட்டு தானியங்களால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே நமது பாரம்பரிய விவசாய முறைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு முதல்கட்டமாக பாரம்பரிய விதைகளை சேமித்து வைக்கும் வகையிலான உள்ளூர் விதை வங்கிகளை உருவாக்க வேண்டும். இந்த வங்கிகளின் மூலம் விவசாயிகள் தரமான, பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து, சேமித்து வைப்பதுடன், தங்களுக்குள் விதைகளை பரிமாறிக்கொள்ளவும் முடியும். நமது விதைகளை நாமே உற்பத்தி செய்வோம் என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்தால் மட்டுமே தரமற்ற விதைகளை வழங்கும் நிறுவனங்களிடம் சிக்காமல் தப்ப முடியும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்