2 பெண் போலீசாருக்கு வளைகாப்பு

சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசாருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-28 22:45 GMT

சரவணம்பட்டி

எந்திர மயமான இந்த நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து துறையிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு குடும்பமாக பணியாற்றும்போது, அவர்கள் எந்தவித அழுத்தமும் இன்றி உற்சாகமாக பணியாற்ற முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.

ஆம்... அப்படி தான் கோவை மாவட்டம் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் தங்களுடன் பணியாற்றிய 2 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தி உள்ளனர். ஒரு குடும்பம் போன்று சீர்வரிசை வழங்கி, அறுசுவை உணவு விருந்தளித்து இந்த வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

இதன் விவரம் வருமாறு:-

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலர்களாக பணி புரிந்து வருபவர்கள் ரேவதி, அலீமா பீவி இவர்கள் 2 பேரும் 7 மாத கர்ப்பிணியாக இருந்தனர். இவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அவர்கள் தங்கள் சொந்த செலவில் புடவை, வளையல், பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை வாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்தனர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை சாதம், வடை பாயாசத்துடன் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அறுசுவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதனால் கர்ப்பிணி பெண் காவலர்கள் 2 பேரும் நெகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் சரவணம்பட்டி போலீஸ் நிலைய போலீசார் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வி கூறுகையில், காவலர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, இது போன்ற நிகழ்வுகள் காவல் நிலையங்களில் நடைபெறுவது போலீசாருக்கு மகிழ்ச்சி அளிப்பதுடன் அவர்கள் மன அழுத்தம் இல்லாமல் சிறப்பாக பணியாற்றுவதற்கு துணைபுரியும் என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்