பச்சிளம் குழந்தை திடீர் சாவு

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தை இறந்தது. குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-07 18:45 GMT

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தை இறந்தது. குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை திடீர் சாவு

ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி லட்சுமி. இவர் பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 28-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-ந் தேதி அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் கழித்து திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி தீவிர சிகிச்சை பிரிவிற்கு குழந்தையை மாற்றியதாக கூறப்படுகிறது.

அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை திடீரென்று குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் குழந்தைகள் வார்டு முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் தர்ணா

குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், குழந்தையின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி தரப்பில் விசாரித்தபோது, கிருமித்தொற்று காரணமாக குழந்தை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் குழந்தையின் உடலை வாங்கிச்சென்றனர். பிறந்து 5 நாட்களே ஆன நிலையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்