பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டு

பொள்ளாச்சி பகுதியில் பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-04-14 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி பகுதியில் பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் திருட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு பகிர்மான கால்வாய், கிளை கால்வாய்கள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் 3-ம் மண்டல பாசனத்தில் 4-வது சுற்றுக்கு கடந்த 27-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கால்வாயில் இருந்து குழாய் அமைத்து தண்ணீர் திருடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீசார், மின்வாரிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சட்டப்படி நடவடிக்கை

இந்தநிலையில் பொள்ளாச்சி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜன், மண்டல துணை தாசில்தார் பட்டுராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு பி.ஏ.பி. பிரதான கால்வாயில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளிப்பாளையம், நெகமம் பகுதியில் குழாய் அமைத்து தண்ணீர் திருடி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து தண்ணீர் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட குழாய்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி.) பிரதான கால்வாயில் கெடிமேட்டில் இருந்து வீதம்பட்டி வரை 39½ கிலோ மீட்டர் வரை கண்காணிப்பு பணி நடைபெற்றது. இதில் கோவில்பாளையம் கிளை கால்வாய் தேவணாம்பாளையத்தில் 5.825-வது கிலோ மீட்டரிலும், 5.300-வது கிலோ மீட்டரிலும் இரு இடங்களில் தண்ணீர் திருட்டப்பட்டது தெரியவந்தது. இந்த இடங்களில் குழாய் அகற்றப்பட்டு உள்ளது. தண்ணீர் திருட்டு குறித்து தொடர்ந்து பகல், இரவு நேரங்களில் அடிக்கடி கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்