ஆயுதபூஜை சிறப்பு பஸ்கள் - சென்னையில் இருந்து 2 நாளில் 2.50 லட்சம் பேர் பயணம்

ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2.50 லட்சம்பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்ததாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-02 06:27 GMT

சென்னை,

காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று முன்தினம் மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 2,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரிஇயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 744 பஸ்கள் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து 62,200 பயணிகள் பயணம் செய்தனர்.

தொடர்ந்து நேற்றைய தினமும் சேர்த்து சென்னையில் இருந்து 2 நாட்களில் சுமார் 3,500-க்கும்மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 2.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்க போதிய பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்ட பஸ்களில் 2.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதே போல் பிற நகரங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆயுத பூஜையையொட்டி அக். 4, 5 ஆகிய தினங்கள் விடுமுறை என்பதால் இன்று (அக்.2), நாளை (அக்.3) ஆகிய நாட்களில் ஊர்களுக்கு பயணிக்க விரும்புவோருக்கும் போதிய பஸ்கள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வர போதிய பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்