புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு
ஊட்டி நகராட்சியில் புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போகி பண்டிகை
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீட்டை சுத்தம் செய்து, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தயாராக வேண்டும். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படக்கூடும். இதனால் வெளியாகும் நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனால் போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி சார்பில், தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் புகையில்லா போகியாக கொண்டாட திட்டமிடப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கட்டுரை போட்டி
இதன் ஒருபகுதியாக ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் நகராட்சி சார்பில், புகையில்லா போகி என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மற்றும் பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக மக்கள் அதிகம் வந்து செல்லும் ஊட்டி மத்திய பஸ் நிலையம், உழவர் சந்தை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.