தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தீபாவளி பண்டிகையையொட்டி பலகார தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பலகார தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. முன்பெல்லாம் தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே குடும்பமாக சேர்ந்து பலகாரங்களை தயார் செய்வார்கள்.
ஆனால் காலப்போக்கில் அந்த நிலை மாறி தற்போது பேக்கரி உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் ஆர்டர் செய்து தீபாவளி பண்டிகைக்கு பலகாரங்களை வித விதமாக வாங்குவது வழக்கமாகிவிட்டது. அதைத்தான் கவுரவமாக கருதுகின்றனர்.
இனிப்பு, கார வகைகள்...
இப்படி வாங்கும் பலகாரங்கள் சுவையாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்பது வாங்குபவர்களின் விருப்பம். தீபாவளி பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள பேக்கரி, இதர பகுதிகளில் இனிப்பு, கார வகைகள் மொத்தமாக அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்வது அவசியமாகும். இதுகுறித்து பேக்கரி உள்ளிட்ட உணவு தயாரிப்பவர்கள் இடையே தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தரமான மூலப்பொருட்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:-
தீபாவளி பண்டிகையையொட்டி சுத்தமான, சுகாதாரமான இடங்களில் மட்டுமே பலகாரங்களை தயாரித்து, விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது. அதேபோல், பாதுகாப்பான குடிநீரை மட்டுமே தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
நேரடியாக சென்று ஆய்வு...
தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிமாக இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவோர் கையுறை பயன்படுத்தி உணவு பொருட்களை கையாள வேண்டும்.
இவ்வாறு நாகை மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பண்டிகை கால பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றனர்.