புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்லில் புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைெபற்றது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 9-வது புத்தக திருவிழா, திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த புத்தக திருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் நகரில் 8 இடங்களில் இருந்து விழப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதன்படி, உழவர் சந்தை, பெஸ்கி கல்லூரி, எம்.வி.எம். அரசு கல்லூரி, பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, பேகம்பூர் அமருன்னிசாபேகம் மேல்நிலைப்பள்ளி, புனித லூர்தன்னை பள்ளி, குடகனாறு இல்லம், எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளி ஆகிய 8 இடங்களில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் 400 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு புத்தக வாசிப்பு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். அவ்வாறு 8 இடங்களில் தொடங்கிய ஊர்வலம் இறுதியில் புத்தக திருவிழா நடைபெறும் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் இலக்கியகளத்தின் தலைவர் மனோகரன், துணை தலைவர் சரவணன், செயலாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.