விழிப்புணர்வு கூட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே போலீஸ்- பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அதை ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கவிதா (வயது 40) என்பவர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் அன்றாடம் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து பேசினார். அப்போது அதே பணியில் முன்பு பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த எல்லப்பன் மனைவி ரேவதி (38) என்பவர், கவிதாவிடம் வாக்குவாதம் செய்து சாதி பற்றி இழிவாக பேசி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரேவதி மீது பசுவந்தனை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதையொட்டி மேலும் பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் உத்தரவின்படி பி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சாதி பாகுபாடு கூடாது என்பது உள்ளிட்டவை குறித்து போலீஸ் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரி முன்னிலை வைத்தார். கூட்டத்தின்போது பொதுமக்கள் சமூக ஒற்றுமைக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.