புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வட்டார வளமையம் மற்றும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசைநாதன், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் குப்பம் சாலை, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.